search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல்லை மாவட்டத்தில் மழை"

    நெல்லை மாவட்டத்தில் நேற்று திடீரென மழை பெய்ததில் இடி தாக்கி விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நாங்குநேரி அருகே உள்ள பரப்பாடி, பார்பரம்மாள்புரம், நம்பியாறு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

    நாங்குநேரி அருகே உள்ள பார்பரம்மாள்புரம் கிராமத்தில் மழை பெய்தபோது அந்த பகுதியை சேர்ந்த முத்து என்ற விவசாயி காட்டுப்பகுதியில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மழை பெய்ததால், ஒரு மரத்தின் அடியில் ஒதுங்கி நின்றார். அப்போது அவரை இடி தாக்கியது. இதில் முத்து சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார்.

    இடி தாக்கியதில் பரப்பாடி பாரதிநகரை சேர்ந்த முத்து செல்வி , செல்வகுமார் ஆகியோரது வீடுகள் தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து அவர்கள் விஜயநாராயணம் போலீஸ் நிலையம் மற்றும் நாங்குநேரி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக நம்பியாற்றில் 55 மில்லி மீட்டரும், ராதாபுரம் பகுதியில் 16 மில்லி மீட்டரும், சிவகிரி பகுதியில் 14 மில்லி மீட்டரும் மழை பெய்திருக்கிறது.

    கருப்பாநதி, அம்பை, அடவிநயினார் பகுதியில் தலா 10 மில்லிமீட்டரும், சங்கரன்கோவில், சேரன்மகாதேவியில் தலா 4 மில்லிமீட்டரும், சேர்வலாறு, மணிமுத்தாறு, ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    மழை காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. ஆனாலும் நீர்மட்டம் உயரவில்லை. பாபநாசம் அணையில் 82.30 அடியாகவும், சேர்வலாறு அணையில் 86.88 அடியாகவும், மணிமுத்தாறு அணையில் 89.80 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது.

    இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்திலும் நேற்று பல இடங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக எட்டயபுரத்தில் 49 மில்லிமீட்டரும், சாத்தான்குளத்தில் 12 மில்லிமீட்டரும், தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் தலா 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

    ×